ஊத்துக்குளி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

ஊத்துக்குளி அருகே கோடை விடுமுறையை கொண்டாட தீம் பார்க் சென்று நீச்சல் குளத்தில் குதித்து விளையாடிய பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-06 14:05 GMT


திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 52). இவர் அப்பகுதியில் பனியன் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஸ்டெல்லா(38) என்ற மனைவியும் சியாம் ராபின்சன்(16), ஐசக்(12) என்ற இரு மகன்களும் உள்ளனர். சியாம் ராபின்சன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும், ஐசக் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

பாஸ்கர் இன்று வழக்கம்போல் பணியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றபிறகு ஸ்டெல்லா தனது மகன்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோடை விடுமுறையில் தனது வீட்டின் அருகில் வசித்து வருபவர்கள் உடன் தீம் பார்க் செல்ல முடிவு செய்துள்ளனர்.

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் கூலிபாளையம் நால்ரோடு அடுத்து எஸ்.பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜி ரெசார்ட் தீம் பார்க்குக்கு இன்று சென்றுள்ளனர். தீம் பார்க் சென்ற உற்சாகத்தில் சியாம் ராபின்சன் அங்கு அமைந்துள்ள நீச்சல் குளத்தில் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் இதனை கவனிக்காமல் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து ஸ்டெல்லா தனது மகன் சியாம் ராபின்சன் அங்கு இல்லாததைக் கண்டு அவனை தேடியுள்ளார். அப்போதுதான் சியாம் ராபின்சன் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சியாம் ராபின்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், சியாம் ராபின்சன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்