திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;

Update: 2023-09-05 18:55 GMT

திருக்குறள் ஒப்புவித்தல்

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவர்கள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 2023-24-ம் ஆண்டுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கொள்ளப்பெறும்.

பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவர். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

ஏற்கனவே முற்றோதலுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களும், புதிதாக முயல்பவர்களும் பங்கேற்க ஏதுவாக உரிய கால அவகாசம் வழங்கப்பெற்றுள்ளது. முற்றோதல் திறனுடையோர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, வாட்ஸ்-அப் மூலமாகவோ (914322-228840) அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தபால் வழியாக அனுப்ப வேண்டும்

கூடுதல் விவரங்களுக்கு 914322 228840 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை (2 படிகளில்) மாணவர்கள் வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், முதல் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை- 622 005. மின்னஞ்சல் முகவரி pdkttamilthai@gmail.com என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்