மீண்டும் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அருகே மீண்டும் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-05 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.செல்லூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் உளுந்தூர்பேட்டை வந்து கல்வி பயின்று செல்கின்றனர். பள்ளி மாணவர்களின் வசதிக்காக காலை நேரத்தில் தடம் எண் 35 என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பஸ் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அடுத்து வரும் அரசு பஸ்சில் மாணவர்கள் ஏறி உளுந்தூர்பேட்டை செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அந்த பஸ்சில் ஏற்கனவே அதிகமான பயணிகள் பயணம் செய்து வருவதால், மாணவர்களால் அந்த பஸ்சில் ஏற முடியாத நிலையும் உள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலையிலும் அந்த பஸ் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உ.செல்லூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கக்கோரியும், தங்கள் கிராமத்திற்கு தனி அரசு பஸ் வந்து செல்ல வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒரு வாரத்தில் தனி அரசு பஸ் ஏற்பாடு செய்வதாக மாணவர்களிடம் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்