கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு - பாட்டியுடன் சாமி கும்பிட சென்றபோது பரிதாபம்

பாட்டியுடன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பள்ளி மாணவன், மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2023-05-07 05:54 GMT

சென்னை கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் மெயின் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகன் கவின் (வயது 13). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொருக்குப்பேட்டை புத்தர் தெருவில் உள்ள கருப்புசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. இதனால் கவின் தனது பாட்டியுடன் கருப்பு சாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

விழாவையொட்டி கோவிலில் இருந்து வழிநெடுக வண்ண வண்ண அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது. கவின், அங்கு தொங்க விடப்பட்டு இருந்த அலங்கார மின்விளக்கை தொட்டபோது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கவின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்