ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2022-08-26 20:08 GMT

ஏரிக்கு சென்றான்

பெரம்பலூர் அருகே ஆலம்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ரிகாஸ்(வயது 9) என்ற மகனும், தேவிகாஸ்ரீ(5) என்ற மகளும் உண்டு. இதில் ரிகாஸ் பெரம்பலூரில் உள்ள ரோவர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று காலை ரிகாஸ், தனது மாமாவுடன் அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கு சென்றான். அப்போது அப்பகுதியில் ரிகாஸ் ஒருபுறமும், அவனது மாமா மற்றொரு புறமும் இயற்கை உபாதை கழிக்க சென்றிருந்தனர். பின்னர் அவனது மாமா வந்து பார்த்தபோது ரிகாசை காணவில்லை. இதனால் அவன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று நினைத்து, அவர் வீட்டிற்கு வந்தார்.

தண்ணீரில் மூழ்கி சாவு

ஆனால் ரிகாஸ் வீட்டிற்கு வராததை அறிந்து, அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவனை காணாததால், ஏரிக்கு சென்று பார்த்தனர். அங்கும் அவன் இல்லாததால் திரும்பி வந்து கிராமத்தில் தேடினர். இதையடுத்து காலை 11 மணியளவில் மீண்டும் அவர்கள் ஏரிக்கு சென்று, அங்கு மண் எடுக்கப்பட்ட குழியில் நிரம்பிய தண்ணீரில் இறங்கி தேடினர்.

அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த ரிகாசை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரிகாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரிகாசின் உடலை பார்த்து அவனது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

போலீசார் விசாரணை

பின்னர் ரிகாசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இயற்கை உபாதை கழித்துவிட்டு ரிகாஸ் கால் கழுவுவதற்காக ஏரி குழியில் இறங்கியபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம், என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் ஏரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்