தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் சாவு
வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் இறந்தான். இது தொடர்பாக போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
தவறான சிகிச்சை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியம், தோப்பல குண்டா ஊராட்சி, ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. விவசாயியான இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
சம்பவத்தன்று சூரியபிரகாசுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக அருகில் உள்ள நாயணசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோபிநாத் என்பவரிடம் சிகிச்சை அளித்தனர். சரியாகாததால் மீண்டும் கிளினிக்குக்கு சென்றனர். அப்போது கோபிநாத் தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு சென்றதும் மாணவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
மாணவன் சாவு
உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலி டாக்டர் கைது
மேலும் ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அதில் கிளினிக் நடத்தி வந்த கோபிநாத் லேப் டெக்னீஷியனுக்கு படித்து விட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து போலி டாக்டர் கோபிநாத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அறிந்த திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குழு அமைக்கப்படும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகளும், 31 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் இது போன்று படிக்காத போலி மருத்துவரிடம் பொதுமக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை தடுக்க கலெக்டர் தலைமையில் அடுத்த வாரம் முதல் புதிதாக குழு அமைத்து போலி டாக்டர்களை முற்றிலும் ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மாவட்டம் முழுவதும் போலி கிளினிக் நடத்துவது குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். மேலும் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே மகன்
சக்கரவர்த்திக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு. அதில் ஒரே மகனான சூரிய பிரகாஷ் தவறான சிகிச்சையால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.