பள்ளி தலைைம ஆசிரியை தொலைத்த5 பவுன் நகைகளை ஒப்படைத்தமாணவி, தாயாருக்கு பாராட்டு
ஓட்டப்பிடாரத்தில் பள்ளி தலைைம ஆசிரியை தொலைத்த 5 பவுன் நகைகளை ஒப்படைத்த மாணவி, தாயாருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை தொலைத்த 5 பவுன் நகைகளை மீட்டு போலீசில் ஒப்படைத்த மாணவி மற்றும் தாயாரை போலீசார் பாராட்டி, ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
தலைமை ஆசிரியை
தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்த சுடலைமணி மனைவி செல்வராணி (வயது 47). இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலையில் செல்வராணி அப்பள்ளியில் பணிபுரியும் ரமணா என்ற ஆசிரியருடன் இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அப்போது செல்போனில் பேசியவாறு சென்றுள்ளார்.
காணாமல் போனநகைகள்
இந்தநிலையில் புதியம்புத்தூரில் வந்தபோது தனது கையில் வைத்திருந்த கைப்பை இல்லாததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக வந்த சாலை வழியாக மீண்டும் திரும்பி வந்து ஓட்டப்பிடாரம் வரை தேடிப்பார்த்தும் நகைப்பை கிடைக்கவில்லை.
அந்த பையில் 1 ½ பவுன் தங்க கம்மல், 3 ½ பவுன் நெக்லஸ் என சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அவர் வைத்திருந்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் செல்வராணியின் நகைகள் காணமால் போன விபரம் அந்த பகுதிமுழுவதும் பரவியது.
மாணவியின் தாய்
இந்நிலையில் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச்சேர்ந்த சிவக்குமார் மனைவி முத்துச்செல்வி (38) புதியம்புத்தூரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது வழியில் கீழே கிடந்த கைப்பை ஒன்றை எடுத்து பார்த்துள்ளார். அதில் தங்க நகைகள் இருந்துள்ளது. அவற்றை வீட்டிற்கு எடுத்து சென்ற முத்துச்செல்வி நகைப்பையை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது டி.எம்.பி மெக்குவாய் கிராமிய மேல்நிலைபள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் செல்வராணியின் மகள் மதிசாவர்த்தினி, தனது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நகையுடன் இருந்த கைப்பையை தவறவிட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
போலீசார் பாராட்டு
இதையெடுத்து முத்துலட்சுமி, தலைமை ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தது மட்டுமின்றி நகைப்பையை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதைதொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், எபினேசர் ஆகியோர் செல்வராணியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து நகைகளை ஒப்படைத்தனர். மேலும் நகைகளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த முத்துலட்சுமியையும், அவரது மகளான மாணவி மதிசாவர்த்தினியையும் போலீசார் பாராட்டி, ஆகியோரை போலீசார் பாராட்டியது மட்டுமின்றி, போலீசார் சார்பில் ரூ 2 ஆயிரம் பரிசு வழங்கி கவுரவித்தனர். அவர்களுக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.