பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஊட்டியில் 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-11-06 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் கலெக்டர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகில் வசிக்கும் தம்பதியினருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி உள்ளார்.

மாணவியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில் சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்வதாக மாணவியை சேகர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது

இந்த நிலையில் பள்ளி மாணவியின் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதில் பள்ளி மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் சேகர் மாணவிக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்ததும், இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி யாரிடமும் இது குறித்து எதுவும் சொல்லாதது தெரிய வந்தது.

இது தொடர்ந்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இதையடுத்து சேகரை ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்த நிலையில் நர்சரி உரிமையாளரான சேகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்துக்கு பரிந்துரை செய்தார்.இது தொடர்ந்து கலெக்டர் அம்ரித், குண்டர் சட்டத்தில் சேகரை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கோவை மத்திய சிறையில் உள்ள சேகரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்