அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆஜராக வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆஜராக வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரூபி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-
கன்னியாகுமாரி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக கடந்த 2012-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது பணி நிரந்தரம் மற்றும் பணப்பலன்களை முறையாக வழங்க ஒப்புதல் அளிக்க கோரி மாவட்ட கல்வி அலுவலருக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக 2016-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எனக்கு சம்பள உயர்வு உட்பட அனைத்து பணப் பலன்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 ஆண்டுகள் ஆகியும் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றவில்லை. அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பட்டுதேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர்(தற்போதைய நிதித்துறை செயலாளர்) உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.