அரசுப்பள்ளி கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
வேடசந்தூர் அருகே அரசுப்பள்ளி கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று மதிய வேளையில் ஸ்ரீராமபுரத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது அரசுப்பள்ளியில் கட்டிடத்தின் உட்புறம் கான்கிரீட் சிமெண்டு பூச்சுக்களும், கட்டிடத்தின் மேல்புற பக்கவாட்டு சுவரின் சிமெண்டு பூச்சுகள் அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்தன. நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
எனவே விபத்து அபாயம் ஏதும் ஏற்படும் முன்பு சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.