அரசு பள்ளி முன்பு குப்பைகளை கொட்டுவது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி 18-வது வார்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா? என்று பொதுமக்கள எதிர்பார்ப்பில் உள்ளனர்.
18-வது வார்டு
தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகரின் மைய பகுதியில் 18-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் விவேகானந்தா நகர மாளிகை தெரு, அஞ்சகார தெரு, சின்னசாமி தெரு, அண்ணாதுரை ரோடு, அப்துல் முஜீப் தெரு, பாரதியார் தெரு. சின்னசாமி நாயுடு தெரு, அம்பள தாடி தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, காசிம் மேஸ்திரி சந்து உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 1500-க்கும் மேற்பட்டோர் இந்த வார்டில் வசித்து வருகின்றனர். 411 ஆண் வாக்காளர்களும், 413 பெண் வாக்காளர்களும் உள்ளனர். நகராட்சியில் குறைந்த வாக்காளர்கள் உள்ள ஒரே வார்டு இதுதான்.
இந்த வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சில குடிநீர் தொட்டிகள் செயல்படுவதில்லை. இந்த வார்டில் தான் புறநகர் பஸ் நிலையம், டவுன் பஸ் நிலையம் அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த பஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். டவுன் பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்லும் பகுதியில் உள்ள நுழைவு வாயிலில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
பஸ் நிலையங்களுக்கு வரும் இணைப்பு சாலைகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வார்டில் அனைத்து தெருக்களிலும் வீடு மற்றும் கடைகளின் முன்பு படிக்கட்டுகள் கட்டியும், கட்டிடக்கழிவுகளை கொட்டியும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்சாலை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருண்டு கிடக்கும் சாலை
இந்த வார்டுக்குட்பட்ட அஞ்சகார தெரு, விவேகானந்தா நகர மாளிகை தெரு, காசி மேஸ்திரி சந்து. சின்னசாமி தெரு உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் போதுமான மின் விளக்குகள் அமைக்காததால் இரவு நேரங்களில் இந்த சாலைகள் அனைத்தும் இருண்டு காணப்படுகின்றன. குறிப்பாக இந்த வார்டில் பிரசித்தி பெற்ற விவேகானந்தா நகர மாளிகை வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இது அந்த பகுதியின் சுகாதாரத்தை பாதிக்கிறது. இந்த வார்டில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகலான சாலை என்பதால் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாய் காட்சியளிக்கிறது.
இதனால் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எரியாமல் கிடக்கும் தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சியில் 4 டாஸ்மாக் மதுபான கடைகள் அமைந்துள்ள ஒரே வார்டு இதுதான். இந்த டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த மதுக்கடைகள் இருக்கும் பகுதியில் உள்ள சாலைகள் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த பரபரப்பாக உள்ளது. இந்த சாலை வழியாக பொதுமக்கள் செல்லவே அச்சத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-
ஆக்கிரமிப்புகள்
தர்மபுரி அஞ்சக்கார தெருவை சேர்ந்த புருஷோத்தமன்:-
ஆத்துமேடு பகுதியில் 6 சமுதாய மக்களுக்காக ஒரு மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மயானம் தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கூட இடமில்லாத நிலை உள்ளது. மேலும் அந்த மயானம் செல்லும் சாலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்லன. இந்த மயானத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. போதுமான மின்விளக்கு வசதியும் இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் அந்த மயானத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் பிரசித்தி பெற்ற விவேகானந்தா நகர மாளிகை தொடக்கப்பள்ளி முன்பு தினமும் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகிறது. நிரந்தரமாக அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுக்கடைகள் அகற்றப்படுமா?
சின்னசாமி தெருவை சேர்ந்த டிரைவர் கனகராஜ்:-
காசி மேஸ்திரி சந்து, அண்ணாதுரை ரோடு, அப்துல் முஜீத் தெரு ஆகிய தெருக்களில் 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மது கடைகளால் அந்தப் பகுதியில் உள்ள வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். மாலை நேரங்களில் கடைகள் திறக்க முடியாத அளவுக்கு மது பிரியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதியம் நேரத்தில் கடைகள் முன்பு மது பிரியர்கள் அமர்ந்து மது குடிப்பதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் மதுபான கடைகளை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.
உயர் கோபுர மின்விளக்கு
பாரதியார் தெருவை சேர்ந்த ராணி சின்னத்துரை:-
எங்கள் வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய வணிக வளாகங்கள் அமைந்துள்ள இந்த வார்டில் முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். குறிப்பாக பென்னாகரம் ரோடு- ஆறுமுக ஆசாரி தெரு இணைப்பு சாலை, அண்ணாதுரை ரோடு- பென்னாகரம் இணைப்பு சாலை, ஏலூர் பிள்ளையார் கோவில் சந்திப்பு ஆகிய இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து சாக்கடை கால்வாய்களையும் உடனே தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.