திருப்பூர் சிறுபூலுவப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஒரே அறையில் 2 வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவலம் உள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது.
மாநகராட்சி பள்ளி
திருப்பூர் மாநகராட்சி சிறுபூலுவப்பட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் போதிய இடவசதியும், வகுப்பறைகளும் இல்லை. குறிப்பாக 3 மற்றும் 4-ம் வகுப்பு மாணவர்கள் ஒரே வகுப்பறையில் பாடம் படித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் பாடங்களை முழுமையாக கவனிக்க முடியாமலும், ஆசிரியர்களும் சத்தமாக பாடம் எடுக்க முடியாத சூழலும் அங்கு நிலவுகிறது.
இதேபோல் அந்த வகுப்பறை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதுடன், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த அறையில் மின்இணைப்பு பாதுகாப்பாக இல்லாமல் மின்சார வயர் வெளியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதேபோல் தொடக்கப்பள்ளியாக இருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட அந்த பள்ளியில் வகுப்பறைகள் உள்பட பள்ளி வளாகம் முழுவதுமே இட நெருக்கடி நிறைந்ததாக காணப்படுகிறது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கூடுதல் வகுப்பறை
பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்குமாறு 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் சார்பில் ஏற்கனவே மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி சிறுபூலுவப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்