ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.
வாகனங்கள் ஆய்வு
தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்காக இயக்கப்படும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 40 தனியார் பள்ளிக்கூடங்களில் இயங்கப்படும், 347 வாகனங்கள், ஈரோடு அருகே உள்ள சோலார் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் கலந்து கொண்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவர், பள்ளிக்கூட வாகனங்களில் அரசு அறிவித்துள்ள மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதா?, வாகனங்களின் இருபுறத்தில் குறிப்பிட்ட அளவுகளில் பள்ளிக்கூடத்தின் பெயர், நிர்வாகத்தின் தொடர்பு எண், வட்டார போக்குவரத்து அலுவலர், போலீஸ் நிலையம் தொடர்பு எண்கள் உள்ளனவா?, அவசர கால வழி அரசு வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.
விதிமுறை
மேலும் அவர் வாகனத்தில் முதல் உதவிப்பெட்டிகள், 2 தீயணைப்பான் கருவிகள் உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை இயங்கும் நிலையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்தும், பள்ளிக்கூட வாகனங்களில் உதவியாளர், நடத்துனர் சான்றிதழ் பெற்றுள்ளனரா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
இவைகளை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி சான்றிதழ் வழங்கினர். சில பள்ளிக்கூட வாகனங்களில் குறிப்பிட்ட சில குறைபாடுகள் இருந்தது. அதனை சரி செய்த பின், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனத்தை காண்பித்து சான்றிதழ் வாங்கி கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடத்தின் ஓட்டுனருக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, கல்வித்துறை அதிகாரிகள், தீயணைப்பு நிலைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதேபோல் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிக்கூட பஸ்களும் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.