பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளி

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

Update: 2022-10-06 18:02 GMT


ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

தொழில்முறை

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாதிரி பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்கவும், சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில் ்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து படிக்கவும் அவர்களது தரத்தை உயர்த்த அரசு சார்பில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றியும், மாணவர்களின் கல்வி, கலை மற்றும் விளையாட்டு போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் உள்பட அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

முன் உதாரணம்

மாதிரி பள்ளியில் கல்வி படிக்கும் மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

நீங்கள் மட்டுமல்லாது உங்களது குடும்பம் மற்றும் கிராம மக்களை மேம்படுத்த நன்றாக படித்து முன்னேற வேண்டும். ஏற்கனவே நமது மாவட்டத்தில் இதுபோன்ற பயிற்சி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது நமது மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

தற்போது 12-ம் வகுப்பு படிக்கும் 80 மாணவர்களும், 11-ம் வகுப்பு படிக்கும் 160 மாணவர்களும் இந்த மாதிரி பள்ளியில் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இப்பள்ளியில் பயிற்சி பெறும் மாணவர்கள் 100 சதவீதம் கண்டிப்பாக தேர்ச்சி பெரும் வகையில் ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

போட்டி தேர்வு

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமையை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து அவர்களின் இலக்கை எய்திட வழிகாட்ட வேண்டும். நீட் மட்டுமே நுழைவுத் தேர்வு அல்ல பல்வேறு போட்டி தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளை தெரிந்து கொண்டு அதற்கான பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.அனைத்து விதமான உட்கட்டமைப்பு வசதிகளும் மாதிரி பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே மாதிரி பள்ளியில் படித்த அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் போட்டி தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமை சேர்க்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாநில மாதிரி பள்ளி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ரவி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்