தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் முறையை நிறுத்த வேண்டும்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் முறையை நிறுத்த வேண்டும் என்று காங்கயத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் முறையை நிறுத்த வேண்டும் என்று காங்கயத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் காங்கயம் பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.செல்லையா தலைமை தாங்கினார்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் முறையை நிறுத்தி, அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியதைப் போல தமிழக அரசும் அமல்படுத்த வேண்டும்.
வரவேற்பு
தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு மற்றும் கால வரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கல்லூரி செல்லும் மாணவிகளுக்கான மாதாந்திர நிதிஉதவித் திட்டம், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழக அரசின் நடவடிக்கைக்கு இக்கூட்டமைப்பின் சார்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இந்தகூட்டத்தில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரசேகர் உள்ளிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.