உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை

புதுமைப் பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக உயர்கல்வி படிக்கும் 89 மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

Update: 2023-02-08 19:46 GMT

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை காணொலி காட்சி மூலம் நேற்று முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, 89 மாணவிகளுக்கு நிதி விழிப்புணர்வு கையேடு, வேலை வாய்ப்பு மலர் மற்றும் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவிகளின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை உணர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதிஉதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வி பயிலும் மாணவிகள்

இத்திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற மாணவிகள் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தமிழ்நாட்டில் உயர்கல்வி (கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவம்) பயில்பவராக இருக்க வேண்டும். தொழில் கல்வி பயில்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று தமிழ்நாட்டில் தொழில்கல்வி (தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகள்) பயில்பவராக இருக்க வேண்டும்.

3500 பேர் விண்ணப்பம்

மேலும் உயர்கல்வியில் இடைநிற்றல் இன்றி கல்வி பயில வேண்டும் என்ற அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இவ்வுதவி வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 4008 மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் 3,500 மாணவிகள் விண்ணப்பித்த நிலையில், முதற்கட்டமாக 500 மாணவிகளுக்கு வரவேற்பு பெட்டக பை (நிதி விழிப்புணர்வு கையேடு, வேலை வாய்ப்பு மலர்) மற்றும் 89 மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகிறது. தொடர்ந்து தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் பொருட்டு, ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்