பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆகாஷ் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-07-30 14:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டத்தின் கீழ் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000-ம், 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை.

சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் கல்வி உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு இல்லை. மத்திய அரசின் ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அவர்கள் பயிலும் பள்ளியின் மூலம் scholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் ஆகும்.

மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் பயிலும் பள்ளியின் மூலம் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் ஆகும். இந்த திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்