கல்லூரிகளை தேடி செல்லும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சலுகை வழங்க திட்டம்

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்குவதற்காக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கு சென்று நிர்வாகிகள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசி வருகின்றனர் என்று நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.

Update: 2022-09-25 03:45 GMT

சென்னையில் முதல் கட்டமாக திருவொற்றியூர் விம்கோநகரில் இருந்து வண்ணாரப்பேட்டை, அண்ணா சாலை வழியாக விமான நிலையத்திற்கு நீல வழித்தடத்தில் 33.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 25 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் 17 ரெயில் நிலையங்கள் சுரங்கத்திலும், 8 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும் உள்ளன.

அதேபோல், முதல் கட்டத்தில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை 2-வது வழித்தடமான பச்சை வழித்தடத்தில் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 17 ரெயில் நிலையங்கள் வருகின்றன. இந்தப்பாதையில் 9 சுரங்க ரெயில் நிலையங்களும், 8 ரெயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும் உள்ளன.

மெட்ரோ ரெயிலை பொறுத்தவரையில் சராசரியாக தற்போது 42 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டவர்கள் பயணம் செய்கின்றனர். இவா்களுக்கு செல்போன் மூலம் கியூ.ஆர். குறியீடு மூலமும் பயண அட்டைகள் மூலமும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 20 சதவீதம் வரை கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக ரெயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரொ ரெயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் அனைத்து கல்லூரிகளுக்கும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் நேரடியாக சந்தித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவா்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றனர்.

கல்லூரியில் இருந்து மாணவர்களை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கும், அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் மாணவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதன் மூலம் 5 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் சந்தித்து பேசி உள்ளனர். கல்லூரி நிர்வாகிகளும் நேரடியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு, பாதுகாப்பாகவும், விரைவாகவும் கல்லூரிக்கு சென்று திரும்ப முடியும்.

அதேபோல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகள் வரை செல்வதற்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள், சைக்கிள், மாநகர பஸ் உள்ளிட்ட வசதிகளும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் செய்து தரப்பட்டு உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்