உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்த்து விடுவதாக மோசடி: டெல்லி டாக்டருக்கு முன்ஜாமீன் மறுப்பு

உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்த்து விடுவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் டெல்லி டாக்டருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2023-09-13 18:44 GMT

சென்னை,

உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்தவர் டாக்டர் ஜோஹிதாதித்யா. இவர், தற்போது டெல்லியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் வாங்கித் தருவதாக கூறி நவீன் வர்ஷன் என்பவரின் தந்தையிடம், ரூ.7.41 லட்சத்தையும், கவியரசு என்பவரது தந்தையிடம் ரூ.7.55 லட்சமும் வாங்கியுள்ளார்.

இந்த தொகையை ஜோஹிதாதித்யா தந்தை மூலம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பின்னர், மாணவர்கள் இருவரும் உக்ரைன் நாட்டிற்கு சென்றபோது, அங்கு இவர்களுக்கு நம்ம ஊரில் உள்ள பி.ஏ., ஆங்கில படிப்புக்கு சமமான படிப்பில் இடம் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால், ஏமாற்றத்துடன் மாணவர்கள் நாடு திரும்பினர்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்படி ஜோஹிதாதித்யா, அவரது தந்தை ஆகியோர் மீது 2 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

ஆஜராக வேண்டும்

இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் ஜோஹிதாதித்யா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "இந்த சம்பவம் எல்லாம் 2018-ம் ஆண்டு நடந்துள்ளது. 2019-ம் ஆண்டுதான் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதுவும் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அந்த படிப்புக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது'' என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம், "மனுதாரரை விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41-ன்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது'' என்று கூறினார். இதையடுத்து, மனுதாரரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தள்ளுபடி

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் விசாரணைக்காக போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராக வில்லை என்று அரசு வக்கீல் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, "உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கித் தருவதாக கூறியதால், புகார்தாரர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால், சொன்னபடி படிப்பில் சேர்த்து விடாததால், கொடுத்த பணத்தை கேட்கின்றனர். எனவே, இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி மனுதாரருக்கு வாய்ப்பு அளித்தும், அவர் ஆஜராக வில்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்