அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி

திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-16 19:25 GMT

திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்மனு அளிக்கப்பட்டது.

கமிஷனர் அலுவலகத்தில் மனு

திருச்சி பாலக்கரை மணல் வாரித்துறை சாலை ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 24). இவர் மற்றும் இவரது நண்பர்கள் உள்பட 15 பேர் நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் திருச்சி சங்கிலியாண்டபுரம் பெல்சி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஒன்றாக செல்வோம். இந்தநிலையில் இ.பி.ரோடு பீரங்கி குளத்தெரு பகுதியை சேர்ந்த ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் அரசின் இ-சேவை மையத்தில் பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் தனக்கு அதிகாரிகள் மட்டத்தில் அதிக செல்வாக்கு இருப்பதாக எங்களிடம் தெரிவித்தார். மேலும் எங்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பி அரசு வேலைக்காக பல லட்சம் ரூபாய் அவரிடம் கொடுத்தோம்.

அதிக வட்டி

மேலும் அதிக வட்டி தருவதாக ரூ.60 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் என கார்த்திக் எங்களிடம் வசூல் செய்தாா். சில மாதங்கள் அந்தத்தொகைக்கு வட்டி கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இ.பி.ரோடு பகுதியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். தற்போது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரைத்தேடி அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதிக்கு சென்றுபார்த்தோம். அங்கும் பலரிடம் அவர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்