போலி டாக்டருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில் போலி டாக்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை முதலியார் தெருவைச் சேர்ந்தவர் விசுவாஸ். இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் விசுவாஸ் மருத்துவம் படிக்காமல் போலியான சான்றிதழ்களை வைத்து கொண்டு சிகிச்சை அளிப்பதாக அப்பகுதி மக்கள் சந்தேகித்தனர். இதுகுறித்து அவர்கள் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டாக்டரின் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் விசுவாஸ் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மோசடி வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் மீண்டும் கிளினிக்கிற்கு சென்றனர். அப்போது அந்த போலி மருத்துவரின் கிளினிக் பூட்டிக் கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலி மருத்துவர் விசுவாசை மயிலாடுதுறை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.