தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாசாரம் தலைதூக்கியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாசாரம் தலைதூக்கியுள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-05-14 05:48 GMT

சென்னை,

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாசாரம் தலைதூக்கியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறி இருப்பதாவது;

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் திரு.சுரேஷ்,திரு.சங்கர்,திரு.தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும் ,மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது,

மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன், சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்,

கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது, தற்போது மீண்டும் இந்த விடியா ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது,

இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன,அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு விடியாஅரசு பொறுப்பேற்க வேண்டும், இனியாவது கள்ளசாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்