செல்போனுக்கு பதில் ப்ளூடூத், ஸ்பீக்கர் அனுப்பி வைத்து மோசடி

ரூ.9 ஆயிரம் மதிப்புள்ளதை, ரூ.1,500-க்கு தருவதாகக் கூறி செல்போனுக்கு பதில் ப்ளூடூத், ஸ்பீக்கர் அனுப்பி வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-19 18:36 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர், பூக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் அருணா. இவருக்கு கடந்த வாரம் தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தங்களின் போன் நம்பர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பிலான செல்போனை, ரூ.1,500-க்கு தருகிறோம் என்று கூறி உள்ளார்.

இதை நம்பிய அருணா போனை அனுப்பி வைக்குமாறு கூறி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு நேற்று பார்சல் வந்துள்ளது. தபால்காரர் பார்சலை கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அருணா பார்சலை பிரித்து பார்த்துவிட்டு பணத்தை தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு தபால்காரர் மறுத்துவிட்டதால் ரூ.1,570 கொடுத்துவிட்டு பார்சலை வாங்கி பிரித்து பார்த்துள்ளார்.

அதில் செல்போன் இல்லாமல், ப்ளூடூத், ஸ்பீக்கர் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த பார்சல் கர்நாடக மாநிலம், பெங்களூர், நீலமங்களா பகுதியில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. இதனை அடுத்து ஏற்கனவே பேசிய நம்பருக்கு தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அதற்கு தனது செல்போனிற்கு படம் எடுத்து அனுப்புங்கள், நன்றாக பார்சலை பிரித்து பாருங்கள் என கூறியுள்ளனர்.

பின்னர் வீடியோ கால் செய்து பொருட்களை காட்டி, தனது பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் போன் இணைப்பை துண்டித்து விட்டனர். பின்னர் மீண்டும் போன் செய்தால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்