தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-10 19:24 GMT

தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி, தில்லைநகரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சங்கர் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் பாவேந்தர் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொறுப்பாளர் இளையராஜா நன்றி கூறினார். பாலக்கரை பகுதி செயலாளர் ஜான்மாணிக்கம், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பிரதாப், ஒன்றிய செயலாளர்கள் விஜயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தேவேந்திர குல வேளாளர் இன மக்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது, மேலும் இது தொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளின்படி திருச்சி மாநகரில் தியாகிகள் இம்மானுவேல் சேகரனார் மற்றும் சுந்தரலிங்கத்திற்கு உருவ சிலைகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சி மாநகரில் பேரமைப்பு சார்பில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் மீது கருப்பு மை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர்கள் வெளியேறுவது குறித்த ஆதரவு பொதுக்கூட்டம் திருச்சியில் நடத்துவது, தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்