வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்
சொத்து தகராறில் தாக்குதல் நடத்திய நிலையில் வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட மாமனார் உள்பட 8 பேரை கைது செய்ய வலியுறுத்தினர்.
தாக்குதல்
அரியலூர் மாவட்டம், நாகமங்கலத்தை அடுத்த கணக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் அழகர்(வயது 32). விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ராஜலட்சுமி தனது கணவர் அழகரிடம், அவரது சகோதரரிடமிருந்து சொத்தை பிரித்து வாங்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு அவர் சிறிது காலம் போகட்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜலட்சுமி ரெட்டிப்பாளையத்தில் வசிக்கும் தனது தந்தை செல்வத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் கடந்த மாதம் 30-ந் தேதி தனது ஆதரவாளர்கள் 8 பேருடன் சேர்ந்து சொத்தை பிரித்துவரக்கோரி அழகரை தாக்கியதாக கூறப்படுகிறது.
போராட்டம்
இதில் காயமடைந்த அழகர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அழகர் உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அழகரின் உறவினர்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், அழகர் சாவில் சந்தேகம் உள்ளது. மேலும் அவரது இறப்புக்கு காரணமான மாமனார் செல்வம் உள்பட 8 பேரை கைது வேண்டும் என்றனர். தொடர்ந்து, அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.