பரிகார பூஜை செய்வதாக கூறிபெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை-கோவை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
கோவையில் பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை
கோவையில் பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மனநலம் பாதிப்பு
கோவை பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். அந்த பெண்ணின் இரு சகோதரர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் அந்த பெண் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு சகோதரர்கள் இருவரையும் கவனித்து வந்தார். இவரின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர். இதனிடையே அந்த பெண்ணின் மூத்த சகோதரர் உடல்நிலை பாதிப்பால் இறந்து விட்டார். இதனால் அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்ட தனது தம்பியை மட்டும் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தையின் நண்பர், அவர்களிடம் மனநல பாதிப்புக்கு பரிகார பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று தெரிவித்தார். மேலும் தனக்கு தெரிந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த பாபு (வயது 40) என்பவர் பரிகார பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பரிகார பூஜை
இதனை நம்பிய அவர்கள் தங்களது மகனுக்கு பரிகார பூஜை செய்யும் படி பாபுவிடம் தெரிவித்தனர். அவர் கடந்த 2021-ம் ஆண்டு அவர்களின் வீட்டிற்கு வந்து பரிகார பூஜை நடத்தினார். தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் தம்பியின் கையில் தாயத்து கட்டினார். மேலும் அவர்களிடம் ஒரு அமாவாசை அன்று பரிகார பூஜை நடத்தினால் உங்களது பெண்ணிற்கு திருமணம் நடைபெறும் என்று ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பிய அந்த பெண்ணின் பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 12.3.2021 அன்று பாபு அந்த பெண்ணின் வீட்டில் இரவு நேரத்தில் பரிகார பூஜை செய்து உள்ளார். அப்போது அவர்களிடம் சம்பந்தப்பட்ட பெண் தவிர வேறு யாரும் வீட்டில் இருக்கக்கூடாது என்று கூறினார்.
பாலியல் பலாத்காரம்
பாபுவின் பேச்சை கேட்ட அந்த பெண்ணின் பெற்றோர்கள் பூஜை நடைபெறும் அறையை விட்டு வெளியேறினர். பின்னர் அந்த பெண்ணை மட்டும் வைத்து பூஜையை தொடர்ந்து பாபு நடத்தினர். பின்னர் தனிமையில் இருந்த அந்த பெண்ணிடம் தன்னுடன் உறவு வைத்து கொண்டால் தான் தோஷம் எல்லாம் போகும் என்று கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் அந்த பெண்ணிடம் இதுகுறித்து வெளியே கூறினால் இறந்து விடுவாய் என்று மிரட்டியும், யாரிடமும் கூறகூடாது என்று அந்த பெண்ணிடம் சூடமேற்றி சத்தியம் வாங்கி கொண்டு, அங்கிருந்து சென்றார். இதன்பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அந்த பெண் சரியாக சாப்பிடாமல் எந்த நேரமும் சோகத்தில் இருந்தார்.
10 ஆண்டு சிறை
இதனால் அந்த பெண்ணின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் பதில் ஏதும் கூறவில்லை. இதன்பின்னர் அடுத்த அமாவாசை வந்தது. அப்போது அந்த பெண் தனது பெற்றோரிடம் அமாவாசை வர உள்ளது, ஆனால் தயவு செய்து பரிகார பூஜை வேண்டாம் என்று கூறினார். உடனே பெற்றோர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது பரிகார பூஜையின் போது பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் இதுபற்றி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் பாபுவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாபுவிற்கு 10 ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.