300 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா?

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-08-23 17:56 GMT


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்குகிறது. இந்த கோவில் 5 வேலி, குளம் 5 வேலி மற்றும் செங்கல் நீரோடை 5 வேலி என்ற பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் தாயார் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சன்னதியை வணங்கி சென்ற நிலையில் இந்த சன்னதி வடிவில் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாறு உள்ளது.

ஓவியங்கள்

சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தேவாசிரிய மண்டபம் என்கிற ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் தேவர்கள் சிவபூஜை செய்த இடமாகவும் அழைக்கப்படுவதால் கோவிலுக்கு வருபவர்கள் தேவாசிரிய மண்டபத்தை வணங்கி விட்டு பின்னர் தான் கோவிலுக்குள் செல்வார்கள் என்பது ஐதீகம். இந்த மண்டபத்தின் மேற்கூரையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளால் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.தியாகராஜர் தேவலோகத்திலிருந்து தேரின் மூலமாக பூலோகம் வரும் ஓவியம் மற்றும் குதிரை வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற ஓவியம், வாணவேடிக்கைகள், 18 வகையான வாத்தியங்கள் உள்ளிட்ட 96 வகையான ஓவியங்கள் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஒவியங்கள் இயற்கையில் கிடைக்கும் சிவப்பு, மஞ்சள், காவி உள்ளிட்ட வர்ணங்கள், மூலிகைகள் கொண்டு மிகவும் நேர்த்தியாகவும், அழுகுறவும் வரையப்பட்டுள்ளன.

வெளி மாநில ஓவியர்கள்

ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட நிலையில் மேற்பரப்பில் கருங்கற்கல் இணைக்கும் இடத்தில் சிறிது, சிறிதாக விரிசல்கள் ஏற்பட்டு மழை நீர் உள்ளே கசிய தொடங்கியது. இதனால் கசிவடைந்த மழைநீர் மண்டபம் மேற்கூரையில் வரையப்பட்ட ஓவியங்களை சேதமடைய செய்தது.இதைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த பக்தர்கள் பங்களிப்புடன் கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூரு மற்றும் ஒரிசாவை சேர்ந்த சிறந்த ஓவியர்கள் மூலம் ஆயிரங்கால் மண்டப கூரை பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களில் அழுக்குகளை நீக்கி, மழை நீர் கசிவால் பாசி படர்ந்ததை அமிலங்கள் கொண்டு சுத்தம் செய்தனர். மேலும் இயற்கை பொருட்களை கொண்டு மேல் கூரையில் உள்ள விரிசல்களை அடைத்தனர். மேலும் இயற்கை நவீன பூச்சு மூலம் ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டன.

14 ஆண்டுகளாக

இதைத்தொடர்ந்து கடந்த 14 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி உள்ள ஆயிரங்கால் மண்டபம் திருவிழா காலங்களில் மட்டுமே திறக்கப்பட்டு, சாமி எழுந்தருளி விழா கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. பிற நாட்களில் எந்தவித பயன்பாடும் இன்றி இ்ந்த மண்டபம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மண்டபத்தின் மேற்கூரை பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு மழை நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. மேலும் பராமரிப்பு இன்றி அழுக்குகள் படிந்தும், வவ்வால்களின் கூடாரமாக மாறி அதன் கழிவுகள் போன்ற காரணங்களால் ஓவியங்கள் சிதைந்து வருகிறது.எனவே தியாகராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள பழுதுகளை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும். இந்த மண்டபத்தின் மேற்கூரையில் தியாகராஜர் பெருமையை பிரதிபலிக்கும் மராட்டியர் கால ஓவியங்களை ஓவிய வல்லுனர்களை கொண்டு, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்