சத்ய நாகராஜா கோவில் தேரோட்டம்

கூடலூரில் சத்ய நாகராஜா கோவில் தேரோட்டம் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2023-03-28 18:45 GMT

கூடலூர், 

கூடலூரில் சத்ய நாகராஜா கோவில் தேரோட்டம் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

கோவில் திருவிழா

கூடலூர் சிவ சண்முக நகரில் சத்ய நாகராஜா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார விசேஷ பூஜைகள், 8 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு மேல் கோத்தர் வயல் கங்கை கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுவாமியை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 25-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. 26-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.

தேரோட்டம்

தொடர்ந்து காலை 11 மணிக்கு கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மேளதாளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடங்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சத்ய நாகராஜா சுவாமி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன், கூடலூர் சக்தி விநாயகர் கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பின்னர் பட்டத்துளசி அம்மன், செவிடிப்பேட்டை சக்தி முனிஸ்வரன் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று நேற்று அதிகாலையில் கோவிலை தேர் அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்