புரட்டாசி மாத சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
திரளான பக்தர்கள் தரிசனம்;
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்
புரட்டாசி மாதம் பெருமாள் சாமிக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பக்தர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் கடைபிடித்து வருகிறார்கள். குறிப்பாக சனிக்கிழமை அன்று பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
இந்தநிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு கோட்டையில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூர் அரங்கநாதர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள்
இதேபோல் ஈரோடு பவானி ரோடு பெருமாள்மலையில் உள்ள கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு பக்தர்கள் படிக்கட்டு வழியாக மலையேறி சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மங்களகிரி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.