சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-11 20:20 GMT

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்ப திருவிழா

களக்காட்டில் ஆண்டுதோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கோலாகலத்துடன் தொடங்கியது. முதல்நாளான அன்று சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் ஆகியோர் கோவிலில் இருந்து வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகள் வழியாக விழா நடைபெறும் தெப்பக்குளத்திற்கு வந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தெப்ப உற்சவம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வந்து காட்சி அளித்தனர்.

வரதராஜ பெருமாள் கோவில்

2-ம் நாளான நேற்று இரவில் களக்காடு வரதராஜபெருமாள் கோவில் தெப்ப திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வரதராஜபெருமாள் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வரதராஜபெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பக்குளத்தின் நாலாபுறமும் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி தெப்பமும், தெப்பக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்தது. 3-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) களக்காடு சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோயில் தெப்ப விழா நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்