சத்தியமங்கலத்தில் புலிநகம் பதித்த சங்கிலி அணிந்த 2 பேரை அழைத்து சென்ற வனத்துறையினர்
2 பேரை அழைத்து சென்ற வனத்துறையினர்
சத்தியமங்கலத்தில் புலிநகம் பதித்த சங்கிலி அணிந்திருந்த 2 பேரை வனத்துறையினர் அழைத்து சென்றனர். உறவினர்கள் முற்றுகை போராட்டத்தால் அவர்களை பின்னர் விடுவித்தனர்.
புலி நகம்
சத்தியமங்கலம் கோவை ரோட்டில் எஸ்.ஆர்.டி. கார்னரில் மராட்டிய காணிக்க இனத்தை சேர்ந்த சுமார் 50 பேர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல வருடமாக பழைய பட்டு புடவைகளை வீடுகளுக்கு சென்று வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து எஸ்.ஆர்.டி. கார்னருக்கு வந்த வன உயிரின தடுப்பு குற்ற பிரிவு அதிகாரிகள் அங்கு வசித்து வந்த சென்னியப்பன், மாரியப்பன் ஆகியோரை புலிநகம் பதித்த சங்கிலி அணிந்திருந்ததாக கூறி கோவைக்கு அழைத்து சென்றார்கள். பின்னர் உங்களுக்கு புலி நகம் எப்படி கிடைத்தது என்று கேட்டார்கள். பிறகு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு பவானிசாகர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்கள்.
முற்றுகை போராட்டம்
இந்தநிலையில் சென்னியப்பன் மற்றும் மாரியப்பனின் உறவினர்கள் ஒன்று திரண்டு வந்து சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். மேலும் அதிகாரிகளிடம் சென்று, 40 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களுடைய மூதாதையர்கள் கொடுத்த புலி நகம் பதித்த சங்கிலியைதான் சென்னியப்பன், மாரியப்பன் அணிந்திருந்தார்கள் என்று கூறினார்கள்.
இதையடுத்து வனத்துறையினர் இதுபோல் புலி நகங்களை அணியக்கூடாது என்று எச்சரித்து இருவரையும் விடுவித்தார்கள். இதனால் முற்றுகை போராட்டமும் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.