சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

Update: 2023-01-29 21:01 GMT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

தாளவாடி

தமிழக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக தாளவாடி, ஆசனூர் கேர்மாளம் மற்றும் ஜீர்ஹள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் சமூக ஆர்வலர்கள், வனவர், வனக்காவலர்கள் கொண்ட தனிக்குழுவினர் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பில் கரும்பச்சை இலைக்கோழி, புள்ளி மூக்கு வாத்து, வெண் கழுத்து நாரை, நீல மேனி ஈப் பிடிப்பான், கருந்தலை மாங்குயில், சிவப்பு வால் காக்கை, வெண் முதுகு பாரு கழுகு மற்றும் சாம்பல் நிற வாலாட்டி என 60-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் வனத்தில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் பறவைகள் முகாமிட்டு வாழ்வாதாரத்துக்கான சூழலை ஏற்படுத்திக்கொண்டுள்ளன என வனத்துறையினர் தெரிவித்தனர்

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. அந்தியூர் வனச்சரகர் உத்தரசாமி தலைமையில் வனத்துறையினர் 10 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பொதுவாக நீர்நிலை பகுதியில் பறவைகள் காலை நேரத்தில் அதிக அளவில் பறக்கும். இதனால் அந்தியூர் வனப்பகுதி மற்றும் அந்தியூரை சுற்றி உள்ள நீர்நிலை பகுதிகளில் வனத்துறையினர் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நவீன தொலைநோக்கி கருவிகள் மூலம் வனத்துறையினர் பார்த்து கணக்கெடுத்தனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பறவைகள் ஏதாவது வந்துள்ளதா? என மிகவும் நுட்பமாக பார்வையிட்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வனப்பகுதியில் பல வகையான கழுகுகள் உள்ளன. அதுமாதிரியான கழுகுகள் எத்தனை உள்ளன என்பதை வனத்துறை குழுக்கள் ஆய்வு செய்து அதை பதிவு செய்து கொண்டன. அதுமட்டுமின்றி அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் அரிய வகையான பிணந்தின்னி கழுகுகள் குறித்தும் கணக்கெடுத்து அதையும் பதிவு செய்து கொண்டனர். மேலும் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்பட பல்வேறு நீர்நிலைகளில் உள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

2 நாட்கள்

கணக்கெடுப்பு பணியின்போது அந்தியூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வரட்டுப்பள்ளம் அணை, அந்தியூர் பெரிய ஏரி, ஓடத்துறை ஏரி, தண்ணீர்பள்ளம் ஏரி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் பாம்புண்ணி கழுகு, தடித்த அழகு மீன்கொத்தி, வானம்பாடி, ஊசிவாள் வாத்து, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, தேன் பருந்து குக்ருவாள், இருவாச்சி, செந்நீல கொக்கு, மரகத புறா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகை பறவைகள் தென்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த பணி காலை மற்றும் மாலை நேரங்களில் என தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்