பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;
காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநிலத்தலைவர் கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மலர்விழி, பொருளாளர் திலகவதி, துணைத்தலைவர் பேயத்தேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில-மாவட்ட நிர்வாகிகளும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டம் குறித்து கலா கூறியதாவது:-
காலமுறை ஊதியம், ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்கவேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்று போராடி வருகிறோம்.
காலை உணவு திட்டத்தை பள்ளி சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைக்கு (நேற்று) 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த போராட்டம் 29-ந்தேதி காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகிறது. எங்கள் கோரிக்கைகள் உணர்ந்து அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.