சேதம் அடைந்து கிடக்கும் சேதுபதி மன்னர் கால சத்திரம்

சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட சேதமடைந்து கிடக்கும் இதம்பாடல் கிராமத்தில் உள்ள பழமையான சத்திரத்தை புனரமைத்து நினைவு சின்னமாக பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-07 18:13 GMT


சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட சேதமடைந்து கிடக்கும் இதம்பாடல் கிராமத்தில் உள்ள பழமையான சத்திரத்தை புனரமைத்து நினைவு சின்னமாக பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

புண்ணிய தலம்

ராமாயண கதையோடு மிக நெருங்கிய தொடர்புடைய மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். உலக அளவில் புண்ணிய தலமாக விளங்கும் ராமேசுவரம், தனுஷ்கோடி, தேவிபட்டினம் ஆகிய கடலில் நீராடி முன்னோர்களை வழிபடுவதை பக்தர்கள் புண்ணியமாக கருதுவதால் சேது யாத்திரை செல்வது பல நூற்றாண்டு காலமாக வழக்கமாகவே இருந்து வருகிறது.

ராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதிகள் ஆட்சி காலத்தில் நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ராமேசுவரம் செல்பவர்களுக்கு உணவு, நீர், தங்கும் இடம் வழங்க 5 மைல் தூரத்திற்கு ஒரு சத்திரம் மற்றும் மடங்கள் கட்டப்பட்டன.

புண்ணிய பயணத்திற்கு வருபவர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியாக சத்திரங்கள் கட்டுவதை ஒரு தலையாய கடமையாக கருதி சேதுபதி மன்னர்கள் செய்து வந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், சிக்கல், தொண்டி, சாயல்குடி, சேதுக்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களிலும் சேதுபதி மன்னர்கள் மூலம் சத்திரங்கள் மற்றும் மடங்கள் கட்டப்பட்டிருந்தன.

அலங்கோலம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியான இதம்பாடல் கிராமம் அருகே சாலை ஓரத்தில் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமையான சத்திரம் மிகவும் இடிந்து சேதமடைந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளித்து வருகிறது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் துறை ஆர்வலர் ராஜகுரு கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் கிராமத்தில் உள்ள சத்திரம் 185 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய சேதுபதி, ராணி முத்துவீராயி நாச்சியார், அவரது சகோதரர் முத்து செல்ல தேவர் ஆகியோரால் கட்டப்பட்டது என சத்திரத்தின் வாசலுக்கு இடதுபுறத்தில் உள்ள கருங்கல்லாலான கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணி முத்து வீராயிநாச்சியார் இதம் பாடல் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி தேவர், சிவனாயிஆத்தா ஆகியோரின் மகள் என்பது இதன் மூலம் அறிய முடிகிறது.

நடவடிக்கை

இந்த பழமையான சத்திரத்தில் இரு அறைகள் மற்றும் தாழ்வாரங்களுடன் முழுவதும் செங்கல் கற்களால் கட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான மடங்கள் மற்றும் சத்திரங்கள் அழிந்து வருகின்றன. பல சத்திரங்கள் அழிந்து விட்டன. சேதுபதி மன்னர்களின் நினைவாக கட்டப்பட்ட மிகவும் பழமையான இது போன்ற சத்திரங்களை பழமை மாறாமல் புனரமைத்து பாரம்பரிய சின்னங்களாக பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்