சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இரட்டை கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமிதுரை மற்றும் போலீசார் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கில் 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளுக்கு மேல் விசாரிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் வழங்ககோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. போலீசார் மற்றும் செல்வராணி தரப்பில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.