சாத்தான்குளம் கோர்ட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கையை ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த பெண் போலீஸ்

சாத்தான்குளம் கோர்ட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கையை பெண் போலீஸ் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்று சிகிச்சைக்கு சேர்த்தார்.

Update: 2022-10-27 18:45 GMT

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை மோடி நகரைச் சேர்ந்தவர் முத்துகுமார். புரோட்டா மாஸ்டரான இவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமலட்சுமியை தாக்கினார். இதுகுறித்த புகாரின்பேரில், தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தனர்.

இந்த நிலையில் முத்துகுமாரின் அண்ணனான திருநங்கை செல்வராஜ் என்ற செல்வி நேற்று முன்தினம் சாத்தான்குளம் கோர்ட்டுக்கு சென்று, தனது தம்பி முத்துகுமார் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள கிணற்றில் மூடியிருந்த இரும்பு தடுப்புகளை அகற்றி விட்டு, கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனே சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, தண்ணீரில் தத்தளித்த திருநங்கை செல்வியை மீட்டனர். தொடர்ந்து அங்கு 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், மயங்கிய நிலையில் இருந்த திருநங்கை செல்வியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது திருநங்கை செல்வியை பெண் போலீஸ் ஒருவர் கைகளில் தூக்கி கொண்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைந்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்