சாத்தான்குளம் வழக்கு விசாரணை இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும்-மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும் என்று மதுரை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாத்தான்குளம் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு, கடந்த 2020-ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கில், அப்போைதய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுகள் முருகன், சாமித்துரை, போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஜாமீன் கேட்டு மனு
இந்த வழக்கில் சிைறயில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சாத்தான்குளம் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளேன். ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.
எனவே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வசதியாக எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
3 மாதத்தில் முடிந்துவிடும்
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு நடந்து வரும் கோர்ட்டுக்கு தற்போதுதான் நீதிபதி நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இன்னும் 3 மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.