எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க அனுமதிக்க கூடாது-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போலீசில் பரபரப்பு புகார்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவிக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

Update: 2022-09-11 21:01 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சாரதா ரவுண்டானா, நரசிங்கபுரம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) வரும் சசிகலா மாலை அணிவிப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் தலைவாசலில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் அவர் மாலை அணிவிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் ஜெய்சங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி மற்றும் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன், தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி, சேலம் புறநகர் மாவட்டபொருளாளர் ெஜகதீசன் ஆகியோர் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகள் அ.தி.மு.க. சார்பில் எங்கள் சொந்த செலவில் வைக்கப்பட்ட சிலைகள் ஆகும். அந்த சிலைகளுக்கு கட்சிக்கு சம்பந்தம் இல்லாத சசிகலா மாலை அணிவிப்பதாக தெரிகிறது. அப்படி அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர் மாலை அணிவித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே இந்த தகவல் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அ.தி.மு.க.விற்கு சம்பந்தமில்லாத சசிகலா சிலைகளுக்கு மாலை அணிவித்து கொடியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். இதனால் ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்