கருமத்தம்பட்டி
கோவை அருகே நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தாக்குதல்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகில் உள்ள பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் முகுந்த ராஜேஷ் (வயது22). இவர் கடந்த 1-ந்தேதி அந்த பகுதியில் உள்ள கணியூர் சுங்கச்சாவடி அருகே 4 நண்பர்களுடன் இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22)என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர்களை உரசியவாறு சென்றுள்ளது. இது குறித்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அதில் சுபாஷை தாக்கியுள்ளனர். இந்த நிலையில் மறுநாள் சுபாஷ் அவனது நண்பர்களுடன் முகுந்த ராஜேஷ் தங்கி இருந்த அறைக்கு சென்று அவரை தாக்கியுள்ளார்.
கோர்ட்டில் சரண்
இதனால் படுகாயமடைந்த முகுந்த ராஜேசை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முகுந்த ராஜேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. இதற்கடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுபாஷ் தலைமறைவானார். அவரை கருமத்தம்பட்டி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவர்,நேற்று முன்தினம் சென்னை மெட்ரோ பாலிட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.