கீரமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் குப்பை வாகனங்களுடன் காத்திருந்த தூய்மை பணியாளர்கள்

கீரமங்கலம் பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரூராட்சி அலுவலக வாசலில் குப்பை வாகனங்களுடன் தூய்மைப் பணியாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Update: 2022-11-17 19:21 GMT

குப்பைகளை கொட்ட எதிர்ப்பு

கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள கடைவீதி, தெருக்களில் சேகரிக்கப்பட்டும் குப்பைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு அம்புலி ஆற்றில் கொட்டப்பட்டது. நீர்நிலையில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ராமனேரி குளத்திற்குள் சில நாட்கள் கொட்டப்பட்டன. அதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாரச்சந்தை திடலில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் சுற்றியுள்ள குடியிருப்புகள், கடைகளில் துர்நாற்றம் வீசுவதுடன் விஷப்பூச்சிகள், நாய்கள் அதிகமாக கூடுமிடமாக சந்தை திடல் மாறியதுடன் பிஸ்டிக்கழிவுகள் அதிகமாக பறந்தது. அதனால் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு சந்தை திடலில் குப்பை கொட்டுவதை நிறுத்தி கொட்டப்பட குப்பைகளை அகற்றி மீண்டும் வாரச்சந்தையை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

பேரூராட்சி வாசலில் குப்பை வாகனங்கள்

இந்த நிலையில் தற்போது பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கீரமங்கலம் - அறந்தாங்கி சாலையில் கொட்டுவதற்காக வாகனங்கள் சென்ற போது அப்பகுதி மக்கள் தடுத்துள்ளனர். அதனால் கொடிக்கரம்பை சாலையில் ஒரு குளத்தில் கொட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை குப்பைகள் சேகரிக்கப்பட்ட வாகனங்கள் கொட்டுவதற்காக சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பைகளை எங்கே கொட்டுவது என தெரியாமல் தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கப்பட்ட குப்பைகளுடன் அனைத்து குப்பை வாகனங்களும் பேரூராட்சி முன்பு நிறுத்தப்பட்டிருந்தது.

அதன் பிறகு பேரூராட்சி நிர்வாகம் விரைவில் நிரந்தரமாக குப்பை கொட்டும் இடம் தேர்வு செய்யும் வரை தற்காலிகமாக ஒரு தனியாருக்கு சொந்தமான பழைய கிணற்றில் குப்பைகளை கொட்டி தற்காலிக தீர்வு ஏற்படுத்தியுள்ளனர். விரைவாக புதிய இடம் தேர்வு செய்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்