நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது

Update: 2022-09-26 21:59 GMT

நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

நெல்லை மாநகராட்சி

நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இந்த வார்டுகள் அனைத்தும் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவை மக்கும், மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணியும் நடைபெறுகிறது.

இதற்காக வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் நிரந்தர தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழு பணியாளர்கள் என 3 வகையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வேலைபார்த்து வருகின்றனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 550 தூய்மை பணியாளர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தினமும் காலை முதல் தங்களது பணிகளான சாலைகளை சுத்தப்படுத்துதல், வீடுகளில் குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி சார்பில் பணிக்கு எடுக்கப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு குறித்த புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் ஏற்படும் சிரமங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும் விதமாக சுயஉதவிக்குழு பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் மேயர் சரவணன், அதிகாரிகள், கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், என்றார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்