தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஆர்ப்பாட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கப்பில்லை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம் வரவேற்று பேசினார். மாவட்ட இணைச்செயலாளர் சக்திவேல், தணிக்கையாளர் நகுலப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் ஆறுமுகம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு தொடக்க உரையாற்றினார். மாநிலத்தலைவர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிலுவை தொகை வழங்க வேண்டும்
மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி மாத சம்பளம் ரூ.13 ஆயிரத்து 848 வழங்க வேண்டும், கொரோனா ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களின் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், சம்பள தொகையை நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.