தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கடையநல்லூரில் நேற்று தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் நேற்று தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டது. இதில் 17 வார்டுகளில் தனியார் தூய்மை பணியாளர்கள் 82 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 340 ரூபாய் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாதந்தோறும் 1200 ரூபாய் பிடித்தம் செய்த வருங்கால வைப்புநிதி பணம், இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு அட்டை, சீருடை ஆகியவை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
வருகிற ஏப்ரல் 1-ந் தேதியுடன் தற்போது பணி செய்யும் தனியார் நிறுவனத்தின் பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிதாக வேறு ஒரு நிறுவனம் தூய்மை பணியை மேற்கொள்ள இருக்கின்றது. எனவே 2018 முதல் சம்பளத்தில் மாதம் 1200 ரூபாய் பிடித்த செய்த வருங்கால வைப்புநிதி பணம், இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு அட்டை ஆகியவற்றை வழங்கக்கேட்டு நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. குப்பைகளை அள்ளும் எலக்ட்ரிக் வாகனம் பழுதடைந்தால், பஞ்சரானால் தொழிலாளர்களே அதனை சரிசெய்ய வேண்டுமென தனியார் நிறுவனம் கூறுவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் காலவரையற்ற போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் ெதாிவித்தனர்.
தனியார் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நிரந்தர பணியாளர்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்தார்.