குளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கொள்ளிடம் அருகே குளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2023-08-08 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே குளத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுகுளம்

கொள்ளிடம் அருகே சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசூரில் சாலை ஓரத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பொதுகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த அனைவரும் குளித்து வந்தனர். அங்குள்ள கோவில்களுக்கு செல்பவர்கள் இந்த குளத்தில் நீராடிய பிறகே கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது.

அப்பகுதியை சேர்ந்த கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும், தண்ணீர் அருந்த செய்வதற்கும் ஏற்ற சிறந்த குளமாக இந்த பொதுகுளம் இருந்து வந்தது. மேலும் அப்பகுதியின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வந்தது. இந்த குளத்திற்கு தண்ணீர் சென்று சேர்வதற்கும், பின்னர் தேங்கிய நீர் வெளியேற்றுவதற்கும் வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரும் பாதிக்கும்

காலப்போக்கில் இந்த குளம் உரிய முறையில் தூர்வாராமல் விடப்பட்டுள்ளதால் குளத்தில் ஒரு பகுதி தூர்ந்து போய் உள்ளது. இ்தனால் புதர் மற்றும் நெய்வேலி காட்டாமணக்கு செடிகளும் மண்டி கிடக்கின்றன.

ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் இருந்து வருகிறது. அந்த தண்ணீரிலும் இன்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நீராடி வருகின்றனர். இந்த குளத்தில் தொடர்ந்து ஊராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குளத்தின் கரையை ஒட்டி மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறந்த விலங்கினங்கள் அனைத்தும் இந்த குளத்துக்குள் போடப்பட்டு வருகின்றன. இதனால் இந்த குளம் மாசுபட்டு வருகிறது. குளத்தில் உள்ள நீருடன், நிலத்தடி நீரும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை மனு

அரசூரில் மிகவும் சிறந்த குளமாக இருந்து வரும் இந்தக் குளத்தில் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்தி குப்பை கொட்டுவதற்கு வேறு இடத்தை தேர்வு செய்யவும், குளத்தின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்