சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்
கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிவன்கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிவன்கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
1,008 சங்காபிஷேகம்
சிவன் கோவில்களில் கார்த்திகை சோம வாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இதையொட்டி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தாண்டு கார்த்திகை முதல் சோமவாரமான நேற்று மாலை 7 மணியளவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிவன் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.. இந்த மாதத்தில் வரும் 4 சோமவாரத்திலும் சங்காபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
துறையூர்
துறையூர் பாலக்கரை நந்திகேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் அதனைத் தொடர்ந்து பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் மகாநந்தியின் முன்பாக 108 வலம்புரி சங்குகளைக் கொண்டு வேதிகை அமைக்கப்பட்டது. வலம்புரி சங்குகளில் புனித நீர் கொண்டு நிரப்பி பூக்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
மலைக்கோட்டை
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல கார்த்திகை மாதத்தில் வரும் அடுத்தடுத்த திங்கட்கிழமைகளில் 108 சங்காபிஷேகமும், கடைசி வார திங்கட்கிழமையன்று 1,008 சங்காபிஷேகமும் நடத்தப்பட உள்ளன.
தா.பேட்டை
தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் சிவாலயத்தில் நேற்று கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோன்று தா.பேட்டை அருகே காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமான கைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது.
முசிறி-சமயபுரம்
முசிறி அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, அண்ணாமலையார் மற்றும் நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது தொடர்ந்து சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டன.
சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைதொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, போஜீஸ்வரருக்கும், ஆனந்தவல்லி தாயாருக்கும் தீபாரதனை நடைபெற்றது.
இதேபோல், சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள நந்தி பெருமான், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசுவாமி கோவில், காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், அழகியமணவாளம் மேற்றலீஸ்வரர் கோவில் திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.