குளித்தலை அருகே உள்ள வைகைநல்லூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் நேற்று வைகைநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அந்த மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்து, இது குறித்து குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்குப்பதிந்து மணல் கடத்தி வந்ததாக குளித்தலை பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.