நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் மணல் அகற்றும் பணி முடிந்தது

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் குவிந்து கிடந்த மணல் அகற்றும் பணி முடிவடைந்தது. அங்கு மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Update: 2022-11-29 20:19 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அங்கு தரைக்கு கீழ்தளம் வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்காக மணல் அள்ளப்பட்டது. ஆனால் பஸ் நிலையம் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் அமைந்திருப்பதால், அங்கு தோண்டப்பட்ட மணலை அள்ளி கொண்டு சென்று விட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பஸ் நிலைய கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. மேலும் அங்கு ஒரு பகுதியில் மலை போல் மணல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே பஸ் நிலையத்தின் கீழ் வாகனம் நிறுத்துமிடமும், ஒரு பகுதியில் பஸ் நிலைய கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது. இதையொட்டி தற்போது தயார் நிலையில் உள்ள பகுதியை மட்டுமாவது திறந்து பஸ்களை இயக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மாநகராட்சி கோரிக்கையின் அடிப்படையில், நெல்லை மாவட்ட முதன்மை கோர்ட்டு அனுமதியின்படி மணல் அகற்றும் பணி நடைபெற்றது. கடந்த 27-ந்தேதி நள்ளிரவு தொடங்கிய பணி நேற்று முன்தினமும், நேற்றும் மும்முரமாக நடைபெற்றது.

இந்த பணி நேற்று மாலையில் முடிவடைந்தது. லாரிகளில் 300-க்கும் மேற்பட்ட லோடு மணலை அள்ளி, ராமையன்பட்டி மாநகராட்சி குப்பைக்கிடங்கு வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த பணியை நெல்லை கோர்ட்டு வக்கீல் கமிஷனர் வேலுச்சாமி, மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் (பொறுப்பு) வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் ஆகியோர் கண்காணித்தனர்.

மணல் அகற்றும் பணி முடிவடைந்த உடன் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''கோர்ட்டு வழிகாட்டுதல்படி சந்திப்பு பஸ் நிலையத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் பஸ் நிலைய கட்டிடத்தில் மீதம் உள்ள பணிகள் முடிக்கப்பட்டு, தேவையான இடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். வருகிற பொங்கல் திருநாளுக்குள் பஸ் நிலையத்தை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்