மணல் மேடாக மாறிய நீர்ப்பிடிப்பு பகுதிகள், பலவீனமான கரைகள்: கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் தாமரைக்குளம்: 15 கிராம மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் தாமரைக்குளத்தை தூர்வார வேண்டும் என்பது 15 கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2022-10-23 18:45 GMT


15 கிராம மக்களின் குடிநீர் ஆதாரம்


திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை பகுதியில் தாமரைக்குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தின் மொத்த பரப்பளவு 250 ஏக்கர் ஆகும். இதனால் குளத்தின் ஒரு கரையில் இருந்து எதிர்திசையில் இருக்கும் கரையை காண்பதே அரிதாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாற்றில் இருந்து, தாமரைக்குளத்துக்கு தண்ணீர் வருகிறது.


மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி குடகனாற்றில் வரும் தண்ணீர் நேரடியாக குளத்துக்கு வருகிறது. இதனால் தாமரைக்குளம் கருநீல நிறத்தில் கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த தாமரைக்குளத்தின் தண்ணீர் அனுமந்தராயன்கோட்டை, பொன்மாந்துறை, ஆவாரம்பட்டி, மயிலாப்பூர் உள்பட 15 கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.


1,250 ஏக்கர் பாசனம்


இதேபோல் குளம் நிரம்பினால் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து விடுகிறது. இதன்மூலம் 15 கிராமங்களிலும் சுமார் 1,250 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.


இங்கு விளையும் காய்கறிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. அதற்கு தாமரைக்குளமே ஆதாரமாக திகழ்கிறது என்றால் மிகையல்ல. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தாமரைக்குளத்தின் தற்போதைய நிலை விவசாயிகளை வேதனை அடைய வைத்துள்ளது.


கருவேல மரங்கள்


கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் தாமரைக்குளம் தண்ணீர் ததும்ப காட்சி அளிக்கிறது. ஆனால் எங்கு பார்த்தாலும் தண்ணீருக்கு பதிலாக கருவேல மரங்கள் தான் கண்களுக்கு பளிச்சிடுகின்றன. அந்த அளவுக்கு குளத்தின் பெரும்பகுதியை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து விட்டன. அதிலும் பெரும்பாலானவை பெரிய மரங்களாக வளர்ந்து விட்டன. இவை குளத்தில் தண்ணீரை வற்ற செய்துவிடும்.


அதேபோல் குளத்தில் ஒருசில பகுதிகள் மணல் மேடாக மாறி வருகின்றன. இதனால் குளத்தின் நீர் கொள்ளளவு குறைந்து விட்டது. மேலும் குளத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் கரை பலவீனமாக காணப்படுகிறது. இதனால் குளம் நிரம்பியதும் பலவீனமான கரை வழியாக விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்றி, குளத்தை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்பது 15 கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தூர்வார வேண்டும்


இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-


குடகனாறு நீர்ப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் சின்னப்பன்: அனுமந்தராயன்கோட்டை உள்பட 15 கிராமங்களில் விவசாயம் நடைபெற தாமரைக்குளமே ஆதாரமாக இருக்கிறது. மேலும் ஒருசில கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அத்தகைய குளம் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. 250 ஏக்கர் குளத்தில் பாதி அளவுக்கு கருவேல மரங்கள் நிற்கின்றன. அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். குளத்தின் தெற்கு கரை பலமிழந்து விட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. சுமார் 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே அந்த கரையையும் பலப்படுத்த வேண்டும்.


அனுமந்தராயன்கோட்டை விவசாயி தாஸ்: முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தாமரைக்குளத்தை தூர்வாரி கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இந்த பகுதிகளில் விளையும் காய்கறிகளை குளத்தின் கரை வழியாக தான் எடுத்து செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் மழைக்காலத்தில் குளத்தின் கரை நடந்து செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பல கி.மீ. தூரம் சுற்றி காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே குளத்தின் கரையை பலப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். மேலும் குளத்தின் கரையில் இருந்து பொன்மாந்துறைக்கு செல்லும் சாலை முற்றிலும் உருக்குலைந்து விட்டது. அதையும் புதிதாக சாலை அமைக்க வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்