திருவாரூரில், அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள்

திருவாரூரில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய சுமார் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Update: 2023-01-18 19:15 GMT

திருவாரூரில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய சுமார் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

முப்போகம் நெல் சாகுபடி

சம்பா சாகுபடி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதியில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் சம்பா சாகுபடி பணியை தொடங்கினர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த அதீத கனமழை மற்றும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

அறுவடைக்கு தயாராக உள்ளது

மழைக்கு தப்பிய சம்பா நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரம் போட்டு பராமரித்து வந்தனர். பல்வேறு சிரமங்களுக்கு இடையே வளர்ந்து தற்போது அந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால் ஒருசில இடங்களில் தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முன்பெல்லாம் 3 போகம் சாகுபடி செய்வோம். தற்போது ஒன்று அல்லது 2 சாகுபடி மட்டுமே நடக்கிறது. கடந்த ஆண்டு பெய்த கன மழையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி பயிர்களுக்கு உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை தெளித்தோம். அதன் காரணமாக பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விட்டது. இன்னும் 10 அல்லது 15 நாட்களில் அறுவடை பணி தொடங்கி விடுவோம்.

கொள்முதல் நிலையங்கள்

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், திருவாரூரில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தற்போது முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய சுமார் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதில் 202 கொள்முதல் நிலையங்கள் நிரந்தரமாகவும், மீதி கொள்முதல் நிலையங்கள் தற்காலிகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அறுவடை பணிகளை பொறுத்து மேலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள்முதல் பணி நடைபெறும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்