கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் சாமி திருவீதி உலா

ஆனித்திருவிழாவையொட்டி தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் நேற்று சிறிய சப்பரத்தில் சாமி திருவீதி உலா வந்தார்.

Update: 2022-07-11 17:39 GMT

தேவகோட்டை,

ஆனித்திருவிழாவையொட்டி தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் நேற்று சிறிய சப்பரத்தில் சாமி திருவீதி உலா வந்தார்.

கண்டதேவி திருவிழா

தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற ஸ்ரீசொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்ேபாது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் இந்த ஆண்டு கடந்த 3-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆனி திருவிழா தொடங்கியது. மாலையில் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை, இரவு சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

சப்பர வீதி உலா

கடந்த 7-ந் தேதி அன்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து 9-ஆம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெறும் என பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் புதிய தேர் செய்யப்பட்ட நிலையில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடைபெறாததாலும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தேரோட்டத்திற்கு பதிலாக சிறிய சப்பரத்தில் சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 4.45 மணிக்கு பிரியாவிடையுடன் சொர்ணமூர்த்தீஸ்வரர், பெரிய நாயகி அம்பாளுடன் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் சூழ சப்பர வீதி உலா நடந்தது. விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோரும் தனித்தனி சப்பரங்களில் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்